
புதுடில்லி: மரபுவழி மாற்றியமைக்கப் பட்ட தொழில்நுட்பத்தின் (ஜி.எம்.,) மூலம் பருத்தி மட்டுமின்றி, ஜி.எம்.,அரிசி, கோதுமை, காய்கறிகள் உற்பத்தி செய்வதில்
சர்வதேச அளவில் இந்தியா இன்னும் இரண்டாண்டுகளில் சாதிக்கும்.இந்திய விவசாய, பயோடெக் துறையில் ஆய்வு செய்யும் பிரபல அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயத்தில் தொழில்நுட்பங்களை புகுத்தும் முயற்சி, இந்தியாவில் அதிக அளவில் நடந்து வருகிறது. விவசாயத்தில் `பயோடெக்னாஜி'யை அதிக அளவில் புகுத்தி, மரபுவழி உற்பத்தியை மாற்றியமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வறண்ட நிலத்திலும், உப்பு நீரிலும் வளரும் வகையிலும் அரிசி உட்பட பல உணவு வகைகளின், வித்துக்களில் மரபு வழி மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் புகுத்தப்படுகிறது.
இந்தியாவில் அரிசி, கோதுமை, பருத்தி, காபி, புகையிலை, பழங்கள், காய்கறிகள் ஆகிய 17 வகை பயிர்களில், ஜி.எம்.,தொழில்நுட்பத்தை புகுத்தி, உற்பத்தியை பெருக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பூச்சிக்கொல்லிகளால் பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பது, வைரஸ் மற்றும் காளான் தாக்குதலை தடுப்பது, வறட்சியை தாங்குவது, வெள்ளம் பாதித்தாலும் சமாளித்து விளைச்சல் பாதிக்காமல் செய்வது, உப்பு நீராக இருந்தாலும், பயிர் விளைவிப்பது ஆகிய விஷயங்கள் குறித்து, மரபுவழி மாற்றியமைக்கும் தொழில்நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.அந்த வகையில், எதிர்காலத்தில் விவசாயம் செய்யப்படும்; விளைச்சலும் அதிகரிக்கும். பல மாநிலங்களிலும், மரபுவழி மாற்றியமைப்பு தொழில்நுட்பம் மூலம் பயிர்களை விளைவித்து ஆய்வுகள் நடந்துவருகின்றன.இப்போதுள்ள ஆய்வு முடிவுகளின் படி விவசாயம் மேற்கொள்ளப்பட்டால், வரும் 2010 ம் ஆண்டில், உலகில் இந்தியா தான் அதிக அளவில் ஜி.எம்.,அரிசி, கோதுமை, காய்கறிகளை விளைவிக்கும் நாடாக இருக்கும்; அதிக அளவில் ஏற்றுமதியையும் செய்யும்.இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.